இறையச்சம் உடையவர்கள் :
நிச்சயமாக! இறையச்சம் உடையவர்கள் இதற்கு முன்னர் நன்மையே செய்து கொண்டிருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 51:16)
இறையச்சம் உடையவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள்.
அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு.
(அல்குர்ஆன் : 51:17-19)
இத்தகைய இறையச்சம் உடையவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை நம்பிக்கை கொள்கின்றோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 3:16)
அன்றி (இறையச்சம் உடையவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 3:17)
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 3:133)
இறையச்சம் உடையவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:134)
அன்றி, இறையச்சம் உடையவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)
(அல்குர்ஆன் : 3:135)
No comments:
Post a Comment