தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
"பலிய்யி கிளையாரிலிருந்து இரண்டு மனிதர்கள் நபி { ஸல் } அவர்களிடம் வந்தார்கள் . இருவரும் ஒரே சமயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் . அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட அல்லாஹ்வின் வழிபாடு விஷயத்தில் கடுமையாக முயற்சிக்கக்கூடியவர் . அவ்விருவரில் , முயற்சி செய்பவர் அறப்போரில் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்து ஷஹீத் ஆக்கப்பட்டார் . மற்றொருவர் , அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழ்ந்தார் . பின்னர் மரணித்தார் . " நான் கனவில் என்னை சொர்க்கத்தின் வாசல் அருகிலே அவ்விருவருடனும் இருந்ததைப் பார்த்தேன் .
அப்போது சொர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து அவ்விருவரில் இறுதியாக மரணித்தவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி அளித்தார் . பின்னர் , மீண்டும் வெளியே வந்து உயிர்த்தியாகம் செய்து ஷஹீதான முதலாமவருக்கு சொர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கினார் .
பிறகு , அவர் என்னிடம் வந்தார். மேலும் , என்னைப் பார்த்து " நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் ; உங்களுக்கு உள்ளே செல்வதற்கான நேரம் வரவில்லை " என்று கூறினார் . இதை நான் காலையில் மக்களிடம் கூறினேன் . மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர் . இந்தச் செய்தி மாநபி { ஸல் } அவர்களுக்கும் தெரிய வந்தது , மக்களும் நபி { ஸல் } அவர்களிடம் சென்று தங்களின் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள் , அதற்கு , நபி { ஸல் } அவர்கள் " எது குறித்து நீங்கள் ஆச்சர்யம் அடைகின்றீர்கள் ? " என்று மக்களை நோக்கி வினவினார்கள் . அப்போது , மக்கள் " அல்லாஹ்வின் தூதரே ! முதலாமவர் கடுமையாக முயற்சி செய்தார் ; அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்து ஷஹீதும் ஆனார் . ஆனால் , மற்றவரோ இவருக்கு முன்னால் சுவனத்தில் நுழைந்து விட்டாரே ! ? " என்று தங்களின் ஆச்சர்யத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்கள் .
அதற்கு , நபி { ஸல் } அவர்கள் " இவர் அவருக்குப் பின்னால் ஒரு வருடம் வாழ வில்லையா ? " என மக்களிடம் கேட்டார்கள் . அதற்கு மக்களும் " ஆம் , வாழ்ந்தார் " என்று ஆமோதித்தனர் .
அப்போது , நபி { ஸல் } அவர்கள் அவர் ரமலானை அடைந்திருப்பார் ; நோன்பு நோற்றிருப்பார் ; உபரியான தொழுகைகளை அதிகமதிகம் தொழுதிருப்பார் இல்லையா ? " எனக் கேட்டார்கள் .
அதற்கு மக்கள் " ஆமாம் " என்று பதில் கூறினார்கள் . ஆகவே தான் அவ்விருவருக்கும் இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய தூரத்தைப் போன்று இடைவெளி உள்ளது " என்று கூறினார்கள் .
நூல் : இப்னு மாஜா
No comments:
Post a Comment