74. விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஹதீஸ்: 74: ரியாளுஸ்ஸாலிஹீன் - Riyalus Saliheen இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத் தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்து சென்றது. மற்றோர் இறைத்தூதருடன் சில பேர் கடந்து சென்றனர். மற்றோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்து சென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் '(வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தினரா?' என்று கேட்டேன். ஜிப்ரீல், 'இல்லை. மாறாக, அடிவானத்தைப் பாருங்கள்' என்றார். உடனே பார்த்தேன். அங்கே மிகப் பெரும் மக்கள் திரள் இருக்கக் கண்டேன். ஜிப்ரீல் 'இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தார். இவர்களின் முன்னிலையில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை. வேதனையுமில்லை' என்று கூறினார். நான் 'ஏன்?' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், 'இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பற௫௭௦௫வை சகுனம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள்' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) அவர்கள் எழுந்து (வந்து) 'அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!' எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை நோக்கி இன்னொரு மனிதர் எழுந்து (வந்து) 'அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்' என்றார்கள்.
No comments:
Post a Comment